ஒற்றுமையின் மகா கும்பமேளா – புதிய சகாப்தத்தின் விடியல்
-பிரதமர் நரேந்திர மோடி
புனித நகரமான பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒற்றுமையின் பிரம்மாண்டமான மகா யக்ஞம் நிறைவடைந்துள்ளது. ஒரு தேசத்தின் மனசாட்சி விழிப்படையும் போது, பல நூற்றாண்டு கால அடிமை மனோபாவ தழைகளை தகர்த்து சுதந்திரம் பெறும்போது அது புதுப்பிக்கப்பட்ட சக்தியின் தூய காற்றை சுதந்திரமாக சுவாசிக்கிறது. இதன் பயன் ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெற்ற ஒற்றுமையின் மகா கும்பமேளா கண் கூடாக தெரிந்தது.
அயோத்தியில் 2024 ஜனவரி 22 அன்று ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்தபோது, தெய்வ பக்தி மற்றும் தேசபக்தி பற்றி நான் பேசினேன். பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின்போது கடவுள்கள், பெண் தெய்வங்கள், துறவிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என வாழ்க்கையின் அனைத்துத் தரப்பினரும் ஒன்று கூடினர். இதில் தேசத்தின் மனசாட்சி விழிப்புற்றதை நாம் கண்டோம். இதுதான் ஒற்றுமையின் மகா கும்பமேளா. இந்த புனிதமான விழாவின் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் ஒன்று சேர்ந்தன.
இந்தப் புனிதமான பிரயாக்ராஜ் அருகே உள்ளது ஒற்றுமை, நல்லிணக்கம், அன்பு ஆகியவற்றின் புனித பூமியான ஷ்ரிங்வெர்பூர். இது பிரபு ஸ்ரீராமரும், நிஷாத்ராஜூம் சந்தித்த இடமாகும். இவர்களின் சந்திப்பு பக்தி, நல்லெண்ணம் ஆகியவற்றின் சங்கமத்தை அடையாளப்படுத்துகிறது. இன்றும் கூட அதே உணர்வுடன் பிரயாக்ராஜ் நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
45 நாட்களாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கி வருவதை நான் கண்ணுற்றேன். இந்த சங்கமத்தில் உணர்வலைகள் எழுந்தன. அனைத்து பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது என்ற ஒரே நோக்கத்துடன் வந்தனர். அனைத்து யாத்ரீகர்களின் ஆர்வம், சக்தி, நம்பிக்கை ஆகியவற்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவற்றின் புனித சங்கமம் நிறைந்திருந்தது.
நவீன நிர்வாக தொழில்முறையாளர்கள், திட்டமிடுவோர், கொள்கை வகுக்கும் நிபுணர்கள் ஆகியோருக்கு ஆய்வுப் பொருளாக பிரயாக்ராஜின் மகா கும்பமேளா உள்ளது. இதற்கு நிகரானது அல்லது உதாரணம் உலகில் வேறெங்கும் இல்லை.
பிரயாக்ராஜில் உள்ள சங்கமித்த நதிகளின் கரைகளில் கோடிக்கணக்கான மக்கள் எவ்வாறு திரண்டனர் என்பதை உலகம் வியப்புடன் பார்த்தது. இவர்களுக்கு முறைபடியான அழைப்புகள் இல்லை, எப்போது செல்ல வேண்டும் என்பதற்கு முன்கூட்டிய தகவல் இல்லை. மேலும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த விருப்பத்துடன் மகா கும்பமேளாவுக்கு புறப்பட்டனர். புனித நதிகளில் நீராடுவதில் பேரின்பத்தை உணர்ந்தனர்.
புனித நீராடலுக்குப் பின் அவர்களின் முகங்களில் வெளிப்பட்ட ஆனந்தத்தையும், திருப்தியையும் என்னால் மறக்க இயலாது. பெண்கள், முதியவர்கள், நமது மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகள் அனைவரும் திரிவேணி சங்கமத்தை அடைவதற்கான வழியை கண்டறிந்தனர்.
குறிப்பாக, இந்தியாவின் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்றதை காண்பது எனக்கு மனநெகிழ்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் இளைஞர்கள் நமது புகழ் பெற்ற கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற ஆழமான செய்தியை மகா கும்பமேளாவில் இளம் தலைமுறையினரின் பங்கேற்பு கொண்டு சென்றது. இதனை பாதுகாப்பது தங்களின் பொறுப்பு என புரிந்து கொண்டுள்ள அவர்கள், அதனை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளனர்.
மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் வருகை தந்த எண்ணற்ற மக்கள் ஐயத்திற்கு இடமின்றி புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். நேரடியாக வருகை தந்தவர்கள் தவிர பிரயாக்ராஜூக்கு வர இயலாத கோடிக்கணக்கான மக்களும் உணர்வுபூர்வமாக இதில் இணைந்துள்ளனர். யாத்ரீகர்களால் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட புனித நீர் லட்சக்கணக்கானவர்களின் ஆன்மீக இன்பத்தின் ஆதாரமாக மாறியுள்ளது. மகா கும்பமேளாவிலிருந்து வீடு திரும்பிய பலர், அவர்களின் கிராமங்களில் பெருமதிப்பைப் பெற்றனர். சமூகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த சில வாரங்களாக நடைபெற்றவை முன்னெப்போதும் காணப்படாதவை என்பதோடு வரவிருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளன.
பிரயாக்ராஜூக்கு இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்பதை எவரும் கற்பனை செய்யவில்லை. கும்பமேளாவின் முந்தைய அனுபவங்கள் அடிப்படையில் பக்தர்கள் வருகையை நிர்வாகம் மதிப்பீடு செய்தது.
ஒற்றுமையின் மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும்.
கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆர்வமிக்க பங்களிப்பை ஆன்மீக அறிஞர்கள் பகுப்பாய்வு செய்தால், இந்தியா அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொண்டிருப்பதையும் புதிய சக்தியுடன் இப்போது முன்னேறி வருவதையும் அறிவார்கள். இது புதிய சகாப்தத்தின் விடியல் என்று நான் நம்புகிறேன். இது புதிய இந்தியாவின் எதிர்காலத்தை பதிவு செய்யும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய மனசாட்சியை மகா கும்பமேளா வலுப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பூர்ண கும்பமேளாவும் சமூகத்தில் அவர்களின் காலகட்டத்தில் திரண்ட ஞானிகள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் பற்றி அறிந்துள்ளனர். அவர்களின் கருத்துக்கள் தேசத்திற்கும், சமூகத்திற்கும் புதிய திசை வழியை காட்டியுள்ளது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளிலும் அர்த் கும்பமேளாவின்போது இந்த சிந்தனைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 144 ஆண்டுகளில் 12 பூர்ண கும்பமேளாக்கள் வந்தபின் வழக்கொழிந்த பாரம்பரியங்கள் கைவிடப்படுகின்றன. புதிய சிந்தனைகள் ஏற்கப்படுகின்றன. காலத்திற்கு ஏற்ப புதிய பாரம்பரியங்கள் உருவாக்கப்படுகின்றன.
144 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளாவில் நமது ஞானிகள் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் என்ற புதிய செய்தியை நமக்கு தந்துள்ளனர். அந்த செய்தி வளர்ச்சியடைந்த இந்தியா – விக்சித் பாரத்.
இந்த ஒற்றுமையின் மகா கும்பமேளாவில், ஏழை அல்லது பணக்காரர், இளையோர் அல்லது முதியோர், கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லது நகரத்தைச் சேர்ந்தவர், இந்தியாவை சேர்ந்தவர் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர், கிழக்கை சேர்ந்தவர் அல்லது மேற்கை சேர்ந்தவர், வடக்கை சேர்ந்தவர் அல்லது தெற்கை சேர்ந்தவர் என்ற பாகுபாடும் சாதி, மதம், சித்தாந்தம் என்ற பாகுபாடும் இல்லாமல் அனைத்து யாத்ரீகர்களும் ஒன்று சேர்ந்தனர். கோடிக்கணக்கான மக்களிடம் நம்பிக்கையை நிறைத்துள்ள ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற தொலைநோக்கின் உருவகமாக இது இருந்தது. இப்போது இதே உணர்வுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் இயக்கத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும்.
ஒரு சம்பவத்தை நான் நினைவுகூர்கிறேன். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு சிறுவனாக தனது தாய் யசோதாவுக்கு ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் தனது வாயில் காண்பித்தார். அதே போல் இந்த மகா கும்பமேளாவில் இந்தியாவின் கூட்டு பலத்தின் மொத்த ஆற்றலை இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள மக்கள் கண்டனர். இந்த தன்னம்பிக்கையுடனும், வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதை நோக்கிய அர்ப்பணிப்புடனும் இப்போது நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.
முன்னதாக பக்தி இயக்கத்தின் ஞானிகள் நாடு முழுவதும் உள்ள நமது கூட்டு தீர்மானத்தின் பலத்தை கண்டறிந்து ஊக்கப்படுத்தினர். சுவாமி விவேகானந்தரில் இருந்து ஸ்ரீ அரவிந்தர் வரை ஒவ்வொரு மகா சிந்தனையாளரும் நமது கூட்டு தீர்மானத்தின் சக்தியை நமக்கு நினைவுபடுத்தியுள்ளனர். மகாத்மா காந்தியும் கூட, விடுதலை இயக்கத்தின் போது இதனை பரீட்சித்து பார்த்தார். சுதந்திரத்திற்குப் பின் இந்த கூட்டு பலம் சரியாக அங்கீகரிக்கப்பட்டு அனைவரின் நல்வாழ்வை அதிகரிப்பதை நோக்கி பயன்படுத்தப்பட்டிருந்தால் புதிய சுதந்திர தேசத்திற்கான மகத்தான சக்தியாக அது மாறியிருக்கும். துரதிருஷ்டவசமாக ஏற்கனவே இது செய்யப்படவில்லை. ஆனால் இப்போது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு மக்களின் கூட்டு சக்தி ஒன்று திரண்டு வருவதைக் காண நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
வேதங்கள் முதல் விவேகானந்தர் வரை, தொன்மையான நூல்கள் முதல் நவீன செயற்கைக்கோள்கள் வரை இந்தியாவின் மகத்தான பாரம்பரியங்கள் இந்த தேசத்தை வடிவமைத்துள்ளன. ஒரு குடிமகனாக, நமது மூதாதையர்கள் மற்றும் ஞானிகளின் நினைவுகளிலிருந்து புதிய ஊக்கம் பெற நான் பிரார்த்திக்கிறேன். இந்த ஒற்றுமையின் மகா கும்பமேளா புதிய தீர்மானங்களுடன் முன்னோக்கிச் செல்ல நமக்கு உதவட்டும். ஒற்றுமை என்பதை நமது வழிகாட்டும் கோட்பாடாக மாற்றுவோம். தேசத்திற்கான சேவை, தெய்வத்திற்கான சேவை என்ற புரிதலுடன் நாம் பணியாற்றுவோம்.
காசியில் எனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, “அன்னை கங்கை என்னை அழைத்தாள்” என்று நான் கூறியிருந்தேன். இது வெறும் உணர்ச்சிபூர்வமானதல்ல. நமது புனித நதிகளின் தூய்மையை நோக்கிய பொறுப்புக்கான அழைப்பாகும். பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமத்தில் நின்றபோது எனது தீர்மானம் மேலும் வலுவடைந்தது. நமது நதிகளின் தூய்மை, நமது சொந்த வாழ்க்கையோடு ஆழமான தொடர்புடையது. நமக்கு வாழ்க்கையை தரும் அன்னையர் என்ற முறையில் சிறியதோ, பெரியதோ நமது நதிகளை கொண்டாடுவது நமது பொறுப்பாகும். நமது நதிகளின் தூய்மைக்காக பணியாற்ற இந்த மகா கும்பமேளா நமக்கு ஊக்கமளித்துள்ளது.
இவ்வளவு பெரிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வது எளிதான பணியல்ல என்பதை நான் அறிவேன். எங்களின் பக்தியில் ஏதாவது குறைபாடு இருந்தால் எங்களை மன்னியுங்கள் என்று அன்னை கங்கை, அன்னை யமுனை, அன்னை சரஸ்வதியிடம் நான் பிரார்த்திக்கிறேன். தெய்வீகத்தின் உருவமாக மக்களை நான் காண்கிறேன். அவர்களுக்கு சேவை செய்யும் எங்களின் முயற்சிகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் மக்களின் மன்னிப்பையும் நான் கோருகிறேன்.
பக்தி உணர்வோடு கோடிக்கணக்கான மக்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சேவை செய்வதும் ஒரு பொறுப்பாகும் என்ற பக்தி உணர்வோடு அது மேற்கொள்ளப்பட்டது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் யோகி அவர்களின் தலைமையின் கீழ், ஒற்றுமையின் மகா கும்பமேளாவை வெற்றிகரமாக்க நிர்வாகமும், மக்களும் ஒருங்கிணைந்து பாடுபட்டனர் என்று நான் பெருமிதத்துடன் கூற முடியும். மாநில அரசாக இருப்பினும், மத்திய அரசாக இருப்பினும் ஆட்சியாளர்களோ, நிர்வாகிகளோ அவற்றில் இல்லை. மாறாக ஒவ்வொருவரும் அர்ப்பணிக்கப்பட்ட சேவகர்கள். துப்புரவு தொழிலாளர்கள், காவல் துறையினர், படகோட்டுநர், ஓட்டுநர், மக்களுக்கு உணவு வழங்குவோர் என அனைவரும் ஓய்வின்றி உழைத்தனர். பல சிரமங்களை எதிர்கொண்ட போதும் திறந்த மனதுடன் யாத்ரீகர்கள் பிரயாக்ராஜ் மக்களால் வரவேற்கப்பட்டது ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர்களுக்கும், உத்தரப்பிரதேச மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தின் ஊசலாட்டமில்லாத நம்பிக்கையை நான் எப்போதும் கொண்டிருக்கிறேன். மகா கும்பமேளாவை காணும் போது எனது நம்பிக்கை பலமடங்கு வலுப்பட்டுள்ளது.
140 கோடி இந்தியர்கள் ஒற்றுமையின் மகா கும்பமேளாவை உலகளாவிய நிகழ்வாக மாற்றியிருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. நமது மக்களின் அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் முயற்சிகளால் நெகிழ்ந்துள்ள நான் விரைவில் 12 ஜோதிர் லிங்கங்களில் முதலாவதான ஸ்ரீ சோம்நாத் ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க உள்ளேன். அப்போது இந்த கூட்டான தேசிய முயற்சிகளின் பலன்களை அவருக்கு காணிக்கையாக்கி அனைத்து இந்தியர்களுக்கும் பிரார்த்தனை செய்ய உள்ளேன்.
நேரடி பங்கேற்பு வடிவத்தில் மகா கும்பமேளா மகா சிவராத்திரி அன்று வெற்றிகரமாக நிறைவடைந்த போதும், கங்கையின் நித்திய நீரோட்டம் போல் மகா கும்பமேளா ஏற்படுத்திய ஆன்மீக பலம், தேசிய மனசாட்சி, ஒற்றுமையின் விழிப்புணர்வு வரும் தலைமுறைகளுக்காக தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கும்.