தேர்வு வீரர்கள்: தேர்வுகள் என்ற போர்க்களத்திற்கு அப்பால்
தர்மேந்திர பிரதான்
-மத்திய கல்வி அமைச்சர்
இயற்கை, அதன் எல்லையற்ற ஞானத்தில், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கியுள்ளது. நமது கைரேகை முதல் கருவிழி வரை, நமது உணர்வுகள் முதல் எண்ணங்கள் வரை, நமது திறமைகள் முதல் சாதனைகள் வரை பலவும் தனித்துவமானவை. மனித தனித்துவம் பற்றிய இந்த ஆழமான உண்மை மிக முக்கிய அம்சமாகும். நமது கல்வி முறை இந்த தனித்துவத்தை பிரதிபலிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் சில உள்ளார்ந்த திறமைகள் உள்ளன. சிலர் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், மற்றவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், இன்னும் சிலர் விளையாட்டில் திறமையுடனும் உள்ளனர். இந்த தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், "கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் பரிபூரணத்தின் வெளிப்பாடு" என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்,
ஒரு குழந்தையின் இயல்பான திறமையை வெளிக்கொணர்வதும், அவர்கள் விரும்பும் கல்வியிலும் கூடுதல் பாடத்திட்ட முயற்சிகளிலும் ஆக்கப்பூர்வமாக அவர்களை ஈடுபடுத்துவதும் நமது கல்வி நிறுவனங்களின் முன் உள்ள கடுமையான சவால்களாக உள்ளன. கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என்ற வகையில், ஒரு குழந்தையின் தனித்துவமான திறமையை வளர்ப்பதே எங்கள் பங்கு. புதிய தேசிய கல்விக் கொள்கை -2020, நாம் எவ்வாறு திறமையை வரையறுத்து வளர்க்கிறோம் என்பதில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் ஒவ்வொரு குழந்தையிடமும் இருக்கும் தனித்துவத்தை உண்மையாக வெளிக் கொண்டுவரக் கூடிய ஒரு தத்துவ அம்சம் இது.
ஒரு குழந்தையின் கல்விப் பயணம் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதே நமது பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் குறிக்கோளாகும். படிப்பின் போதோ அல்லது தேர்வின் போதோ எந்த மன அழுத்தமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கல்வியில் ஆரோக்கியமான சீர்திருத்தங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அடிப்படைக் கற்றல் முதல் ஆராய்ச்சியின் மிக உயர்ந்த எல்லைகள் வரை நமது கல்விச் சீர்திருத்தங்களுக்கு இந்தப் பார்வை மையமாக உள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் புதுமையான அணுகுமுறைகள் ஆரம்பக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்துகின்றன. கற்றலை ஒரு சுமையாக இல்லாமல் மகிழ்ச்சியான பணியாக ஆக்குகின்றன. ஒவ்வொரு குழந்தையும் தனது இயல்பான திறமைக்கு ஏற்ப மலர்கிறது என்பதை நமது புதிய கல்வி முறை அங்கீகரிக்கிறது.
அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் எங்கள் கொள்கை, மற்றொரு புதுமையான முன்னோக்கிய படியை பிரதிபலிக்கிறது. வாழ்க்கையின் பாதை எப்போதும் நேரியலாக இருக்காது. கற்றல் பல்வேறு சூழ்நிலைகளில் மாறுபட்ட வேகங்களில் நிகழலாம் என்பதை இது அங்கீகரிக்கிறது. கற்பவர்கள் ஒரு உணர்ச்சிகரமான ஆர்வத்தைத் தொடரும்போது, நடைமுறை அனுபவத்தைப் பெறும்போது அல்லது தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதால் முறையான கல்வியை நிறுத்தலாம். அவர்கள் முறையான கல்விக்குத் திரும்பும்போது, அவர்களின் அனுபவங்களும் சாதனைகளும் கைகொடுக்கப்படுகின்றன. மேலும் இவை மதிப்பிடப்படுகின்றன. அவை அவர்களின் கல்விப் பதிவில் இணைக்கப்படுகின்றன. இந்த தகவமைப்பு, கற்றலுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. மக்களை தங்கள் வாழ்க்கையின் எந்த நேரத்திலும் கற்றல் சூழல் அமைப்புக்கு மீண்டும் கொண்டு வருகிறது.
நமது இளைஞர்களின் மன நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில், முழுமையான வளர்ச்சியை தேர்வுகள் மறைக்காத ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த முக்கியமான சவாலை அங்கீகரித்து, தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை சமாளிக்க உதவுவதை எங்கள் அரசு தேசிய முன்னுரிமையாக கொண்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் ஆகியோர் மதிப்பெண்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை மாற்றுவதற்கான எங்களது உறுதிப்பாட்டை பிரதமரின் பரீட்சைக்கு பயமேன் ("பரிக்ஷா பே சர்ச்சா") என்ற தேர்வு குறித்த கலந்துரையாடல் முன்முயற்சி பிரதிபலிக்கிறது. மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்களுடனான பிரதமரின் கலந்துரையாடல், தேர்வு தொடர்பான கவலையை தேசிய விவாதமாக மாற்றியுள்ளது. தேர்வுகள் குறித்த கவலையைத் தணிக்க பிரதமர் பல ஆண்டுகளாக முயற்சித்துள்ளார். அந்தக் கவலை மனதில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பிரதமரின் நடைமுறை குறிப்புகள், அவரது சொந்த வாழ்க்கை, அனுபவங்களிலிருந்து பெறப்பட்டவை. அவை தேர்வுக்குச் செல்பவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இது அவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத உகந்த தேர்வு செயல்திறனை உறுதி செய்கிறது. உண்மையான தலைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக பிரதமர் திகழ்கிறார். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்கால தலைமுறையை வளர்ப்பதற்கான ஒரு தொலைநோக்கு தலைவரின் அர்ப்பணிப்பை நாம் காண்கிறோம்.
இந்த மாற்றத்திற்கு பெற்றோர்களும் சிவில் சமூகமும் மையமாக உள்ளன. மனநலம், ஆதரவான கற்றல் சூழல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதில் பரீக்ஷா பே சர்ச்சா கலந்துரையாடல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 10, 12-ம் வகுப்பு மட்டுமல்லாமல், நமது ஒட்டுமொத்த கல்வி சூழலிலும் தேர்வுகளால் ஏற்படும் அழுத்தம் அகற்றப்பட வேண்டும்.
சமூகங்கள், கல்வியாளர்கள், குடும்பங்கள் ஒன்றிணைந்து மாணவர்கள் செழிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்போது, வெற்றி ஏற்படுகிறது. வகுப்பறை முதல் விளையாட்டு மைதானம் வரை, தொழிற்பயிற்சி மையங்கள் முதல் ஆராய்ச்சி ஆய்வகங்கள் வரை, பல்வேறு திறமையாளர்கள் தங்கள் திறன்களைக் கண்டறிந்து செழிப்பதற்கான இடங்களை நாம் உருவாக்க வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், நமது கல்வி முறை தேசிய மாற்றத்திற்கான முக்கிய அடித்தளமாக நிற்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் சாதிக்க தனது தனித்துவமான பாதையைக் கண்டறிய உரிமை உண்டு என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். பலதரப்பட்ட திறமைகளை வளர்க்கும்போது, நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தி, அனைத்து துறைகளிலும் நமது தேசத்தின் திறன்களை மேம்படுத்துகிறோம்.
இன்று, நமது மகத்தான தேசத்தின் ஒவ்வொரு பெற்றோர், ஆசிரியர், குடிமக்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். கல்வியின் மாற்றம் என்பது வெறுமனே ஒரு அரசின் முயற்சி மட்டுமல்ல. இது நமது கூட்டு அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு தேசிய இயக்கமாகும்.
நம் குழந்தைகள்தான் நமது எதிர்காலம். அவர்கள் தங்கள் தனித்துவமான திறமைகளால் பிரகாசித்து, நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார்கள். ஒளிமயமான எதிர்காலம் நம்மை அழைக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்திலும் பாரதத்தின் எதிர்காலத்தின் தனித்துவம் உள்ளது. மன அழுத்தமில்லாத கற்றல் முறையே, மாணவர்களின் தனித்துவமான திறன்களை மேம்படுத்துவதற்கான திறவுகோலாக இருக்கும்.
************